இந்தியா
ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: வன்முறையில் இறங்கிய பொதுமக்களால் ஏற்பட்ட விபரீதம்

கேரள மாநிலத்தில் நேற்று மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொது மக்கள் வன்முறையில் இறங்கியதால் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது .
கேரளாவில் உள்ள ஒரு கடையில் நேற்று தேவானந்தா என்ற மாணவி உள்பட 18 பேர் ஷவர்மா சாப்பிட்டனர். ஷவர்மா சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்ததை அடுத்து உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தேவானந்தா மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்த காவல்துறை அதிகாரிகள் ஷவர்மா தயாரித்தவர் மற்றும் கடை உரிமையாளரை கைது செய்தனர். மேலும் கேரளாவில் உள்ள அனைத்து ஷவர்மா கடைகளை இழுத்து மூட அரசு உத்தரவிட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது .
இந்த நிலையில் மாணவியின் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஷவர்மா கடைக்கு சொந்தமான வேன் ஒன்று நேற்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பொதுமக்கள் அந்த வேனை மறித்து தீவைத்தனர். வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை உண்டாக்கிய நிலையில் காவல்துறையினர் பதட்டத்தை போக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.