தமிழ்நாடு
ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்: டிடிவி தினகரன்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தலில் தனித்து களம் கண்ட டிடிவி தினகரனின் அமமுக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த கட்சி குறைந்தது 2 அல்லது 3 இடங்களையாவது கைப்பற்றும் என கணிக்கப்பட்டது ஆனால் அமமுக இதுவரை எந்த தொகுதியிலும் முன்னிலையில் இருப்பதாக தகவலில்லை. அனைத்து தொகுதியிலும் தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது அமமுக. அதே போலதான் சட்டசபை இடைத்தேர்தலிலும் அனைத்திலும் தோல்வி முகத்தில் உள்ளது அமமுக.
குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் தொகுதியான தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பின்னடைவை சந்தித்து வருகிறார். தங்க தமிழ் செல்வன் மூன்றாம் இடைத்திலேயே நீடித்து வருகிறார். இந்நிலையில் இந்த தோல்விகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு, பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.





















