தமிழ்நாடு
சென்னையில் நாளை மீண்டும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக சென்னை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பதும் இது குறித்து இன்று சட்டசபையில் அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்கள் காரசாரமாக விவாதம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதேநாளில் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதியில் உள்ளவர்கள் முன் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் இன்னும் ஐந்து நாட்களுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















