தமிழ்நாடு
காலியாக உள்ள கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இறந்ததை அடுத்து அவரது திருவாரூர் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தனது பதில்மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் காலதாமதம் ஆவதாலும் மழை காரணமாக தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதாலும் கண்டனங்கள் வலுத்தது.
இதனையடுத்து திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டுமென மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கின் தீர்ப்பை பொறுத்து திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.




















