இந்தியா
ரூ.10,000 கோடி லாபம்.. ஊழியர்களுக்கு சம்பளத்தை வாரி வழங்கும் டிசிஎஸ்!

ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக உலகின் முன்னணி நிறுவனங்களே செலவைக் குறைப்பதற்காக ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் டிசிஎஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி இலாபம் பெற்றதையடுத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்ற டிசிஎஸ் நிறுவனம் 70 சதவீத ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வை வழங்க இருப்பதாகவும் மீதமுள்ள ஊழியர்களுக்கு அவர்களுடைய செயல் திறனை பொருத்து சம்பள உயர்வு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணி செய்து வரும் நிலையில் அனைவருக்கும் 10 முதல் 20 சதவீத ஊதியம் அதிகம் கிடைக்கும் என்றும் இதனால் 4 லட்சம் ஊழியர்கள் தங்களுடைய மாத சம்பளத்தை அதிகமாக பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
டிசிஎஸ் நிறுவனத்தின் முந்தைய ஆண்டு அறிக்கையின்படி 8 சதவீத நிகர லாபம் உயர்ந்துள்ளதாகவும் இதனால் அந்த நிறுவனத்தின் லாபம் ரூ.10,000 கோடியை எட்டி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்தே டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் டிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 முதல் 12,000 புதிய பணியாளர்கள் நியமனம் செய்யவுள்ளதாகவும் மூன்றாவது காலாண்டிற்கு பிறகு இந்த பணியமர்த்தல் நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முன்னணி நிறுவனங்களே புதிய பணியாளர்களை நியமனம் செய்வதை நிறுத்திவிட்டு, இருக்கும் பணியாளர்களை வெளியேற்றி வரும் நிலையில் டிசிஎஸ் நிறுவனம் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதோடு ஏற்கனவே பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.