வணிகம்
12,000 டிசிஎஸ் ஊழியர்கள் பணி நீக்கம் – என்ன காரணம்? சிஇஓ விளக்கம்!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது தனது ஊழியர்களில் 2% பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவால் சுமார் 12,000 ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும் எனத் தெரிகிறது.
TCS நிறுவனத்தில் மொத்தமாக சுமார் 6 லட்சம் (600,000) பேர் உலகளாவிய அளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 2% என்ற எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் பெரியது.
இது தொடர்பாக TCS தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கிரித்திவாசன் அளித்துள்ள விளக்கத்தில், இந்த பணி நீக்கம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அல்லது செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் காரணமாக அல்ல என்றும், முக்கிய காரணங்கள் திறன் பொருத்தமின்மை (skill mismatch) மற்றும் மறுபயன்பாட்டு சவால்கள் (redeployment challenges) எனத் தெரிவித்துள்ளார்.
அதாவது, சில ஊழியர்களின் திறன்கள் தற்போது மற்றும் எதிர்கால தேவைகளுடன் பொருந்தவில்லை. மேலும், அவர்களை வேறு திட்டங்களில் மாற்றி நியமிக்க இயலாத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, டிசிஎஸ் பங்குகள் பங்கு சந்தையில் 1.27% வரை சரிவு கண்டுள்ளன. இது நிறுவனத்திற்கு கடினமான முடிவாக இருந்தாலும், நீண்ட கால வளர்ச்சிக்காக எடுத்த நடவடிக்கை என சிஇஓ கூறியுள்ளார்.




















