தமிழ்நாடு
ரூ.40,000 கோடி முதலீட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை கூடிய தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம், 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பைப்-லைன் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
மின் சாதனங்கள், ஆற்றல், ஜவுளி மற்றும் பிற துறைகளில் இந்த 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு கிடைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தொழில்துறை திட்டங்களுக்குச் சம்மந்தப்பட்ட துறைகள் அனுமதிகளை வழங்கும். தேவைப்பட்டால் அதற்கான ஊக்கத்தொகைகளும் வழங்கப்படும்.
மேலும் இந்த கூட்டத்தில் மார்ச் 20-ம் தேதி நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாகப் பெண்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாய் உரிமை தொகையை எப்போது முதல் வழங்கலாம் என விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பிறகு, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாகவும் விவாதிக்கப் பட்டதாக www.bhoomitoday.com தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.