வணிகம்
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு குறைப்பு!

வங்கி ஏடிஎம் மையங்களில் பொதுவாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்கப் பெரும்பாலான வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால் எஸ்பிஐ வங்கி ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணத்தினை ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க அனுமதி அளித்து வருகிறது.
ஆனால் இதனைக் குறைக்க முடிவு செய்துள்ள எஸ்பிஐ வங்கி வர இருக்கும் அக்டோபர் 31-ம் தேதி முதல் தங்களது வாடிக்கையாளர்களால் தினசரி 20,000 ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
இதுவே அதிகத் தொகையை ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க அனுமதி வேண்டும் என்றால் அதற்கு டிபிட் கார்டின் திட்டத்தினை மாற்ற வேண்டும். இவ்வாறு டெபிட் கார்டின் திட்டத்தினை மாற்றும் போது ஆண்டுக் கட்டணங்கள் போன்றவை உயரும்.
ஏடிஎம் மையங்களில் அதிகளவில் மோசடிகள் நடைபெறும் நிலையில் பணம் எடுக்கும் வரம்பைக் குறைக்கும் போது மோசடியின் தாக்கம் குறையும் என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரிக்கும் என்றும் எஸ்பிஐ வங்கி கூறுகின்றது.



















