தமிழ்நாடு
ஆருத்ரா மோசடி பணத்தை கொண்டு பாஜகவில் பதவி: ஹரீஷ் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்து கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது.

#image_title
இந்த வழக்கில் அந்நிறுவனத்தின் இயக்குநரும் தமிழக பாஜக நிர்வாகியுமான ஹரீஷ் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைதான ஹரீஷ் தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. ஹரீஷ் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார்.
அந்த பொறுப்பை பெறுவதற்கு பாஜகவை சேர்ந்த சிலருக்கு மோசடி செய்த பணத்திலிருந்து பணம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பணம் பெற்ற பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகி டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஹரீஷை 11 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. ஹரீஷ் பயன்படுத்திய செல்போன், கார் மற்றும் சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.