கிரிக்கெட்
ஓய்வு பெற்றார் டேல் ஸ்டெய்ன்: தென்னாப்பிரிக்காவின் வேகப்புயல் கரையை கடந்தது!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான் மிகவும் விரும்பும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
15 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணியின் நம்பிக்கையாக விளங்கி வரும் ஸ்டெய்ன் 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதன் முதலாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 93 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2008-ஆம் ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டெய்ன், அந்த ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 86 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
காயம் காரணமாக தொடந்து பாதிக்கப்பட்டு வந்த ஸ்டெய்ன் அவ்வப்போது அணியில் இடம்பிடிக்க முடியாமல் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் இவருக்கு காயம் ஏற்பட உலகக் கோப்பைத் தொடரிலும் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில் தனது டெஸ்ட் ஓய்வு குறித்து ஸ்டெய்ன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், நான் மிகவும் விரும்பும் போட்டியிலிருந்து இன்று நான் விலகுகிறேன். கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிதான் சிறந்த ஃபார்மட் என்பது எனது கருத்து. நான் தொடர்ந்து டி20, ஒரு நாள் போட்டிகளில் முழு உத்வேகத்துடன் விளையாடுவேன். இந்த நேரத்தில் நான் யாருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லவில்லை. கிரிக்கெட்டில் உள்ள அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் என் பயணத்தில் பங்களித்திருக்கிறார்கள் என்றார்.






















