தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் கொரானா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? அமைச்சர் மா சுப்பிரமணியன்

தமிழகத்தில் மீண்டும் கொரானா கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பதில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 200க்கும் அதிகமாக தினசரி கொரனோ பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரானா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்திலும் கொரானா கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் 2 சதவீத அளவுக்கு கூட கொரானா பாதிப்பு இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கணக்கில் எடுத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியம் கூறினார்.
இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த முகாம்களை பயன்படுத்தி இதுவரை முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.