வணிகம்
காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!
Published
2 minutes agoon
By
Poovizhi
இந்திய காப்பீட்டு துறையில் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு (FDI) மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டது. இந்த முதலீடுகள் அனைத்தும் தானியங்கி வழிமுறையின் கீழ் மேற்கொள்ளப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்து, துறையின் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஒழுங்குமுறை பாதுகாப்புகள் மற்றும் சட்ட விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் அரசு வலியுறுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி, இந்திய காப்பீட்டு துறையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் 1938 ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மேலும், காப்பீட்டு சேவைகளை வழங்க விரும்பும் நிறுவனங்கள், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI-யிடமிருந்து உரிய அனுமதி மற்றும் உரிமங்களை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-க்கு மட்டும் தனி விதிமுறை தொடர்கிறது. எல்.ஐ.சி நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு உச்சவரம்பு 20 சதவீதமாகவே இருக்கும் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த முதலீடுகளும் தானியங்கி முறையின் கீழ் அனுமதிக்கப்படும்.
எல்.ஐ.சி-யில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் 1956 ஆம் ஆண்டின் ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் மற்றும் 1938 ஆம் ஆண்டின் காப்பீட்டுச் சட்ட விதிகளின் கீழ் கட்டுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு முதலீடு பெற்றுள்ள இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களில் குறைந்தபட்சம் ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அரசு அறிவித்துள்ளது. அதாவது தலைவர், மேலாண் இயக்குநர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரி பதவிகளில் இந்தியர் ஒருவர் இருக்க வேண்டும்.
அதேபோல், காப்பீட்டு துறையின் இடைநிலை நிறுவனங்களுக்கும் 100 சதவீத FDI அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் காப்பீட்டு தரகர்கள், மறு காப்பீட்டு நிறுவனங்கள், ஆலோசகர்கள், கார்ப்பரேட் முகவர்கள், மூன்றாம் தரப்பு நிர்வாகிகள், இழப்பு மதிப்பீட்டாளர்கள் மற்றும் காப்பீட்டு களஞ்சிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அடங்கும்.
இந்த அறிவிப்பு, இந்திய காப்பீட்டு துறையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.












