இந்தியா
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…’- திருக்குறளை மேற்கோள் காட்டி கோவையில் மோடி உரை!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்று கோவையில் மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் தமிழகத்திற்கான நலத்திட்டங்களை வரிசையாக அடுக்கினார். மோடி பேசுகையில், “தொழில் நகரமான கோவைக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது தொடங்கிவைக்கப்பட்டுள்ள திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழகமே பயன்பெறும். புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் 65 சதவிகிதம் தமிழகத்துக்கே வழங்கப்படும்.கடல்சார் வணிகம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றைக் குறித்து மிகுந்த பாரம்பரியம் கொண்டதாக தமிழகம் உள்ளது. கப்பல் போக்குவரத்தைப் பொறுத்த வரையில் வ.உ.சி-யின் தொலை நோக்குப் பார்வை நமக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
பவானி சாகர் அணையை விரிவுபடுத்துவதன் மூலம் பல விவசாயிகள் பயன் பெறுவர். இந்த சமயத்தில் எனக்கு திருவள்ளுவர் சொன்ன ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்னும் குறள் தான் நியாபகத்துக்கு வருகிறது” எனக் கூறினார்.


















