இந்தியா
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு நாங்கள் காரணமல்ல: பாகிஸ்தான் மறுப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு மற்றும், துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர்கள் இருந்த வாகனத்தின் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட எஸ்யுவி கார் ஒன்று வேகமாக வந்து மோதி பலத்த சத்தத்துடன் வெடித்ததில் வீரர்கள் வந்த வாகனம் உருக்குலைந்து போனது. இதில் 44 வீரர்கள் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடமே ரத்தக்களறியாகக் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பில் புதிதாக இணைந்த அகமது அலியாஸ் வாகர் என்ற நபர் இத்தாக்குதலை நடத்தியதாகப் பொறுப்பேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், இத்தாக்குதலுக்கு தங்கள் நாடு எந்தவிதத்திலும் காரணமல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளது பாகிஸ்தான் தரப்பு.




















