தமிழ்நாடு
ஓபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி: அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகியுள்ளது.

#image_title
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் ஓபிஎஸ் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர்.
இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கும், கட்சியின் அடிப்படை நோக்கத்திற்கும் விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளைத்தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதியாக ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை.

#image_title
பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கி, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் என வாதிட்டனர்.
இதனையடுத்து ஈபிஎஸ் தரப்பு தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தது. அதில், கட்சி அலுவலகத்தை சூறையாடியதே ஜூலை 11 நடந்த பொதுக்குழுவில் ஒபிஎஸ் தரப்பை நீக்க காரணம். கட்சிக்கும் அதன் தலைவர்களின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்தால் தான் அவர்களை நீக்கினோம் என ஈபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. மேலும், ஓபிஎஸ் தனக்கென தனிக்கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை நீக்கியுள்ளார், நிர்வாகிகளை நியமித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

#image_title
எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஓபிஎஸ் தரப்பு தான் உண்மையான கட்சி என்றால், தேர்தல் ஆணையத்திலும், மக்கள் மன்றத்திலும் பலத்தை நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு வாதிட்டது.
இதனையடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது, அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளது உறுதியாகியுள்ளது.