தமிழ்நாடு
ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமல்ல; முதல்வர் விளக்கம்!

ஜனவரி 16-ம் தேதி, மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தகவல் வெளியானது.
மாட்டு பொங்கல் அன்று தமிழகத்தில் அரசு விடுமுறை. அன்று எப்படி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல், பள்ளியை வைக்கலாம் என்று நேற்று சர்ச்சை எழுந்தது.
அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, வீட்டில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள், மோடியின் இந்த நிகழ்ச்சியைக் காண விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அதை இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்தது மட்டுமல்லாமல், டிவிட்டர் பதிவும் வெளியிட்டுள்ளார்.
வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத மாணவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உரையை பார்க்க வேண்டுமென விருப்பப்பட்டால் பள்ளிகளில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்றே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது கட்டாயம் அல்ல. #PongalHoliday #TNGovt
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 28, 2019