ஆன்மீகம்
நவராத்திரி 2025: தொடக்க தேதி, முகூர்த்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்!

பெண் சக்தியைப் போற்றும் உன்னத பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் தெய்வீக சக்திகளை வழிபடும் இந்த விழா, பராசக்தி அசுரர்களை வென்றதை நினைவுகூரும் பண்டிகையாகவும் விளங்குகிறது.
ஆண்டு முழுவதும் நான்கு விதமான நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன — சைத்ர நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாகம்பரி நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி. இவற்றில் புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி மிகுந்த சிறப்புடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான நவராத்திரி செப்டம்பர் 22, திங்கட்கிழமை அன்று துவங்கி, அக்டோபர் 2, வியாழக்கிழமை விஜயதசமியுடன் நிறைவடைகிறது.
செப்டம்பர் 22 – நவராத்திரி துவக்க நாள். காலை 06.09 மணி முதல் 08.06 மணி வரை கலசம் அமைக்க சிறந்த முகூர்த்தமாக கருதப்படுகிறது.
அதே நாளில் அபிஜித் முகூர்த்தமும் காலை 11.49 மணி முதல் 12.38 மணி வரை அமைகிறது. இந்த நேரத்தில் கலசம் வைத்து, கொலுவை தொடங்குவது மிகவும் சிறப்பானதாகும்.
செப்டம்பர் 28 முதல் மகா சஷ்டி, மகா சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய பண்டிகைகள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்படும்.
அக்டோபர் 01 – சரஸ்வதி பூஜை (மகா நவமி)
அக்டோபர் 02 – விஜயதசமி
நவராத்திரியின் ஒன்பது நாட்களில்,
முதல் மூன்று நாட்கள் துர்கை தேவியை,
அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை,
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியைப் பூஜித்து வழிபடுவது வழக்கம்.
பெண்கள் விசேஷமாகக் கொண்டாடும் இந்த நவராத்திரி காலத்தில், குங்கும அர்ச்சனை, விளக்கு பூஜை, மாவிளக்கு வழிபாடு போன்ற வழிபாடுகளைச் செய்து அம்பிகையின் அருளைப் பெறுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
