தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சி வாழாவெட்டியாகிவிட்டது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு!

மத்தியில் தற்போது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த பாஜக அரசுக்கு தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துணையாக உள்ளது. தமிழக அமைச்சர்கள் மோடியையும், பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசி வருகின்றனர். அதே நேரத்தில் மோடி எங்கள் டாடி என கூறும் அளவுக்கு உள்ளனர் அதிமுக அமைச்சர்கள்.
2014-இல் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பிடித்த பாஜக தற்போது 2019 தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸுக்கு பெரும் சவாலாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை எழும்ப விடாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை செய்து வருக்கிறது. இது காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கையாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காங்கிரஸ் கட்சியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இந்தியா வல்லரசாக உருப்பெறப் போவது உறுதி. அந்த வல்லரசு நாட்டின் முக்கிய அங்கமாக தமிழகம் இருக்கும். அப்போது தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். இதுதான் காலத்தின் கட்டாயம். காங்கிரஸ் கட்சிக்கு இனி வாழ்வே கிடையாது. அது வாழாவெட்டியாகிவிட்டது என்று விமர்சித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.








