இந்தியா
‘எனக்கா தடை போடுறீங்க..?’- தேர்தல் ஆணையத்துக்கு பதிலடி கொடுத்த மம்தா; கடுப்பில் பாஜக

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது.
இந்த முறை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவும் இடையில் தான் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க போராடி வருகிறது. பாஜக முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 7-ம் தேதி பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற அவரது பேச்சு தொடர்பாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை இந்தத் தடை அமலில் இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து கொல்கத்தா காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டார்.

மம்தாவுக்குப் பிரச்சாரம் செய்யத் தடை விதித்ததால், தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாகத் தான் செயல்பட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.





















