தமிழ்நாடு
மதுரை மெட்ரோ இரயில் திட்டம்: வைகை ஆற்றில் மண் பரிசோதனை தொடக்கம்!

தமிழ்நாட்டில் சென்னையைப் போலவே, மதுரையிலும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் வேகமெடுத்து உள்ளன. இதற்காக தற்போது, வைகை ஆற்றின் நடுவில் மண் பரிசோதனை தொடங்கி உள்ளது.
மதுரை மெட்ரோ இரயில் (Madurai Metro Train)
தமிழ்நாட்டின் தூங்கா நகரமான மதுரை மாவட்டத்தில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் சுமார் 31 கி.மீ. தொலைவுக்கு 18 இரயில் நிலையங்களுடன் கூடிய மெட்ரோ இரயில் சேவையை செயல்படுத்துவதற்கான பணிகளை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சுமார் 26 கி.மீ. தொலைவிற்கு மேம்பாலங்களும், புகழ்பெற்ற வைகை ஆற்றில் இருந்து வசந்தம் நகர் வரையில் 5 கி.மீ. தொலைவு வரை பூமிக்கு அடியில் சுரங்கப் பாதையாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வைகை ஆற்றில் மண் பரிசோதனை
மதுரை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி. அஸோஸியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது. மதுரை மெட்ரோ இரயில்வே திட்டத்திற்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக வைகை ஆறு உள்பட கிட்டத்தட்ட 66 இடங்களில் மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றின் கீழ் சுரங்கப் பாதையில் மெட்ரோ இரயில் செல்ல உள்ளது. இதனால் வைகை ஆற்றின் நடுவில் மண் பரிசோதனை நடைபெற்று வருகின்றது. அங்கு கிடைக்கப் பெற்ற பாறை கற்களை, ஆய்வகங்களில் வைத்து பல வகையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 100 அடி கீழ் வரை பாறைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வைகை ஆற்றின் கீழ் சுரங்கப் பதையில் மெட்ரோ இரயில் செல்ல இருப்பதனால், மண்ணின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை வருகின்ற ஜூன் மாதத்திற்குள் முடித்து, அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு மெட்ரோ இரயில் பணிகளைத் தொடங்கி 2027 ஆம் ஆண்டிற்குள் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.