தமிழ்நாடு
ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள்: சென்னை உயர்நீதிமன்றம்!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், பல மோசடிகளும் வளர்ந்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. அதில் ஒன்று தான், ஆன்லைன் பண மோசடி. இந்த நிலையில், மின்னணு பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், அலைக்கழிக்கப் படுகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பண மோசடி
கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்ட சம்பளம் ரூ.3 லட்சம், தனது வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவ கல்வி பயிலும் மாணவி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ கல்லூரி மாணவியின் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை எனவும், பேடிஎம் கணக்கில் இருந்து தான் காணாமல் போனதாகவும் வங்கியின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், வாடிக்கையாளருக்குத் தெரியாமல் பணப் பரிவர்த்தனை நடக்காது. பேடிஎம் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனதால், நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டோம் என வங்கியின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இதனை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மின்னணு பணப் பரிவர்த்தனை மோசடிகளால் பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், அலைக்கழிக்கப் படுகின்றனர். வங்கி நிர்வாகமும், பேடிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். இன்னும் 2 வாரங்களில் மருத்துவ கல்லூரி மாணவியின் பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என, பேடிஎம் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், பணம் பறிபோவது மட்டுமின்றி மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.