தமிழ்நாடு
இன்று மாலை குறைந்த தாழ்வழுத்த பகுதி: 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்றியதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


















