உலகம்
தலைநகரில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினால் ரூ.19 லட்சம். அரசின் அதிரடி அறிவிப்பு!

தலைநகரிலிருந்து குடும்பத்துடன் வெளியேறினால் லட்சக்கணக்கில் பணம் தரப்படும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே மிக அதிகமாக நெருக்கடியான பகுதிகளில் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்றும் இங்கு மக்கள் தொகை அதிகமாகி வருவது வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு அல்லது கிராமப்புற பகுதிகளுக்குச் சென்றால் பரிசு அளிக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டில் 71 குடும்பத்தினரும் 2020 ஆம் ஆண்டு 290 குடும்பத்தினரும் டோக்கியோவில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இந்த நிலையில் டோக்கியோவில் இருந்து ஒரு குழந்தை உள்ள குடும்பம் வெளியேறினால் ஒரு மில்லியன் யென் வழங்கப்படும் என்றும் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 6.33 லட்சம் வழங்கப்படும் என்றும் அதே நேரத்தில் இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம் டோக்கியோவில் இருந்து வெளியேறினால் 3 மில்லியன் வழங்கப்படும் என்றும் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 19 லட்சம் வழங்கப்படும் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து 2027 ஆம் ஆண்டுக்குள் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வெளியேறி புறநகர் அல்லது கிராமப்புற பகுதி களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கியோவில் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்பதும் புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் டோக்கியோவில் இருந்து வெளியேறி புறநகர் அல்லது கிராமப் பகுதிகளில் தங்கி இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் டோக்கியோவுக்கு திரும்பினால் பரிசு பணத்தை அரசுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் டோக்கியோவில் இருந்து வெளியூர் சென்றவர்கள் அந்த பகுதியிலேயே வணிகம் செய்ய தொடங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு டோக்கியோவில் இருந்து மக்கள் வெளியேறுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.