தமிழ்நாடு
ஆளுநரை சிறை பிடித்த மாணவர்கள்!

புதுவை காலாப்பட்டில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கு நேற்று சென்றார். அப்போது கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் அங்கிருந்த மாணவர்கள் கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை, அவற்றை நிறைவேற்றி தாருங்கள் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அதற்கு பதிலளிக்காமல் தான் மழைநீர் சேகரிப்பு தொடர்பாகத்தான் ஆய்வுக்கு வந்ததாக கூறினார். இருந்தாலும் விடாமல் மாணவர்கள் எல்லா இடத்தையும் பார்வையிடுகிற நீங்கள் எங்கள் பிரச்சனையும் பார்த்து சரி செய்து கொடுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால் மாணவர்களின் குறைகளுக்கு மதிப்பளிக்காமல் கிரண்பேடி அங்கிருந்து காரில் புறப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் காரை விரட்டி அதனை மறித்து வாயிற்கதவை பூட்டி அவரை சிறைபிடித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து இறங்கிவந்த கிரண்பேடி பொதுமக்கள் குறைதீர்க்கும் நேரத்தில் ஆளுநர் மாளிகையில் தன்னை வந்து சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்குமாறு கூறினார்.
இருந்தாலும் மாணவர்கள் சமாதானம் ஆகாததால் காவல்துறையினர் தலையிட்டு மாணவர்களை கலைந்து போக வைத்தனர். அதன் பின்னரே கிரண்பேடியின் கார் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறியது. ஆளுநரை மாணவர்கள் சிறை பிடித்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.




















