சினிமா செய்திகள்
கன்னட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு

கர்நாடகாவில் உள்ள பிரபல கன்னட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீடுகளில், வருமானவரித்துறை அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், கன்னட திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
பெங்களூரில் வசிக்கும் கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகர்களான, சிவ ராஜ்குமார், புனித் ராஜ்குமார், யாஷ், சுதீப் ஆகியோரது வீடுகளில், வருமான வரித்துறை
அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். ஹாட்ரிக் ஸ்டார் என்ற பெயரில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தம் 200 அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டனர்.
கன்னட நடிகர்கள் மட்டுமின்றி ரஜினியின் லிங்கா படத்தை தயாரித்த கன்னட தயாரிப்பாளரான ‘ராக்லைன்’ வெங்கடேஷ், மற்றும் சி.ஆர்.மனோகர், விஜய் போன்ற தயாரிப்பாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் சிக்கி உள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களான சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டார்களாக திகழ்ந்து வரும் நிலையில், நடத்தப்பட்ட இந்த அதிரடி ரெய்டு கன்னட திரையுலகினரை ஆட்டம் காண வைத்துள்ளது.
மேலும், நான் ஈ, பாகுபலி, புலி போன்ற படங்களில் நடித்த சுதீப் மற்றும் சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தின் நாயகன் யாஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் வீடுகளில் இருந்தும் கணக்குக்கு வராத பணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



















