தமிழ்நாடு
பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது: பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#image_title
சில தினங்களுக்கு முன்னர் பாஜக-அதிமுக இடையே இருந்து வந்த மோதல் போக்கில் பாஜக நிர்வாகி தினேஷ் ரோடி எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்தார். இதையடுத்து தினேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. ஆனால் தற்போது அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தினேஷ் ரோடி அவர்களை ஆறு மாத காலம் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற அறிவித்த அறிவிப்பானது உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் திரு தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது என கண்டனம் தெரிவித்தார்.