தமிழ்நாடு
திமுகவில் ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது, ஏன் ஸ்டாலின் கூட நாத்திகவாதி இல்லை: தமிழிசை அதிரடி!

காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கிற அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க கொள்கையில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும் என கோரிக்கை விடுத்த பாஜக தலைவர் தமிழிசை மு.க.ஸ்டாலின் நார்த்திகவாதி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 வருடங்களுக்கு பின்னர் அத்திவரதர் நீரிலிருந்து நிலத்துக்கு வந்து அருள் பாலிக்கிறார். அவரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் காஞ்சியை நோக்கி படையெடுக்கின்றனர். அத்திவரதை பார்க்க பொதுமக்கள் கால்கடுக்க பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இவ்வளவு நாள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்தி வரதர் தற்போது எழுந்து நின்று காட்சி அளிக்கிறார். காஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலத்தில் ஆகஸ்ட் 17 வரை பக்தர்களுக்கு காட்சி தர உள்ளார். நின்ற கோலத்தில் காட்சியளித்துவரும் அத்திவரதரை தரிசிக்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேற்று சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொள்கை மாறுபாடு இருந்தாலும் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வர வேண்டும். அப்படி வருகை தந்தால் அவரை நான் வரவேற்கிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவைச் சேர்ந்த பலர் அத்திவரதரை தரிசனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். முன்பெல்லாம் ஒளிவுமறைவாக வருவார்கள். இப்போது வெளிப்படையாக வருகிறார்கள்.
திமுகவில் ஒருவர்கூட நாத்திகவாதி கிடையாது. ஏன் ஸ்டாலின் கூட நாத்திகவாதி இல்லை. அவருக்கு எல்லா நம்பிக்கையும் இருக்கிறது. அதனால்தான் அவருடைய மனைவியை விட்டு அனைத்து இறை நம்பிக்கையையும் பூர்த்தி செய்து கொள்கிறார். இதை விமர்சனம் செய்யவில்லை. நான் வரவேற்கிறேன். இதுபோல அத்திவரதரை நேரடியாக தரிசிக்கும் காலம் ஸ்டாலினுக்கு வரும். தொண்டர்கள் வழி தான் தன் வழி என ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். தொண்டர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள். அவரும் மாறவேண்டியது தானே என்றார்.







