தமிழ்நாடு
சில்லுண்டி தனமான பேச்சுகளுக்கு பதிலளிக்க முடியாது: துரைமுருகன் அதிரடி!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக திமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திமுக பொருளாளர் துரைமுருகன் அந்த ஒரு கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வழங்கினார்.
இதனையடுத்து துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசியலை கடந்து திமுக நிவாரண நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும், திமுக சார்பில் புயல் பாதிப்பு உள்ள மாவட்ட மக்களுக்கு உடை, உணவு, மருந்து என அனைத்து வகை வசதிகளையும் ஏற்படுத்தி தர திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளதாகவும். திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொடுக்கவும் உள்ளனர் என்று துரைமுருகன் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்க்கட்சி தரப்பினர்தான் மக்களை போராட்டதிற்கு தூண்டி வருகின்றனர் என சில அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர் என செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த துரைமுருகன், மக்கள் நலம் பெற வேண்டும் என்றுதான் நாங்கள் உதவிசெய்து வருகிறோம். எனவே மக்களை பற்றி பேசதான் எங்களுக்கு நேரம் இருக்குமே தவிர இதுபோன்ற சில்லுண்டி தனமான பேச்சுகளுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.






















