இந்தியா
ஓசூரில் விமான நிலையம் மறுக்கப்பட்டதன் பின்னணி தெரியுமா?

ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ராணுவ அமைச்சகம் கைவிரித்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் விமான நிலையம் அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி யுள்ளது. இதற்காக 1250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு முதல் பட்ட பணிகள் துவங்கியுள்ளன.
ஓசூரில் இருந்து பெங்களுரு கெம்பே கவுடா விமான நிலையம் 75 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. இதற்காக விமான போக்குவரத்து அமைச்சகம் 2008ல் போட்ட ஒப்பந்தத்தில் பெங்களுரு விமான நிலையத்தைச் சுற்றி 150 கி.மீ.தூரத்திற்கு எந்த விமான நிலையமும் அமைக்கக்கூடாது என்ற விதி உள்ளது. இது 2033 வரை அமலில் இருக்கும்.
ஓசூர் விமான நிலையம் அமையும் இடம் கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து தூரம் குறைவாக இருப்பினும் அனுமதி பெற்று பணிகளை தொடங்கி 2033க்கு பின் ஓசூர் விமான நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
ஆனால் ஓசூரைச் சுற்றியுள்ள வான் பகுதியில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் இயங்குகிறது. இங்கு ராணுவ விமானங்கள் உலங்கு வானூர்திகள் சோதனை செய்யப் படுகின்றன. இந்த வான்வெளியில் பயணியர் விமான நிலையம் அமைத்தால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறி ராணுவ அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.
ஆனால் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி ராமகுப்பம் மண்டலம் விஜிலாபுரத்தில் 2019 ஜனவரி 3ல் 430 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் அமைக்க அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் நின்று போனதை மீண்டும் உயிரூட்டி குப்பம் தகதர்த்தி ஸ்ரீகாகுளம் தடேபள்ளிகுடம் நாகார்ஜீனசாகர் துனி அன்னாவரம் மற்றும் ஓங்கோல் ஆகிய 7 இடங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர அரசு குப்பம் விமான நிலைய பணிகளை முழுவீச்சில் தொடங்கி உள்ளது. 2027ல் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ள இநத திட்டத்திற்காக 1250 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து ஆந்திர மாநிலம் குப்பம் 36 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. அதுவே ஓசூரிலிருந்து 90 கி.மீ.தொலைவில் உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குப்பம் விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என ஆந்திர அரசு வாதிக்கிறது.
ஓசூரிலிருந்து 75 கி.மீ. தொலைவிலுள்ள கெம்பே கவுடா விமான நிலையம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமான நிலையத்திற்கு செல்ல மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் ஆந்திராவிலுள்ள குப்பத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அரை மணி நேரத்தில் விரைவில் செல்லும் வகையில் சாலை வசதி உள்ளது. எனவே குப்பத்தில் விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஓசூருக்கு விமான நிலையம் வருவது சந்தேகமே என்று கூறுகிறார்கள்.
ஆந்திர மாநிலம் குப்பத்தில் விமான நிலையம் அமைக்கத்தான் ஓசூருக்கு அனுமதி வழங்காமல் கைவிரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
“ஓசூர்தால்“ என்ற தனியார் விமான ஓடுதளம் 30 ஆண்டுகளாக உள்ளது. இங்கு பிரதமர் செல்லும் பெரிய விமானங்கள் கூட பழுது பார்க்கும் பணிக்காக வருகின்றன. அப்போதெல்லாம் ராணுவ விமான சோதனை நடக்க வில்லையா? இது அரசியல் பழிவாங்கும் சதி என்று கூறுகின்றனர் அப்பகுதிவாசிகள்.









