தமிழ்நாடு
இன்று 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி உள்ளன என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றினை தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி உள்பட பல பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


















