வணிகம்
Gold Rate 2026: ஜனவரியில் மீண்டும் உயருமா தங்கம், வெள்ளி விலை? நகை வாங்குவோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

சமீப நாட்களாக தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, ஒரே நாளில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், நகை வாங்க காத்திருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை, தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.980 உயர்ந்து ரூ.1,04,800 என்ற இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது. இந்த திடீர் உயர்வு நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160 என்ற அளவில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
அதன்பின் செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மேலும் வீழ்ச்சி அடைந்தது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.420 குறைந்து ரூ.12,600 ஆகவும், சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ.23 குறைந்து ரூ.258 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,58,000 என்ற அளவிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை வீழ்ச்சிக்கு, உக்ரைன் – ரஷ்யா போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு, மேலும் முதலீட்டாளர்கள் லாபத்தை எடுப்பதற்காக தங்கத்தை விற்பனை செய்தது போன்ற காரணங்கள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர வாய்ப்பு உள்ளது என்று தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இதனால், நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

