வணிகம்
வெறும் ரூ.15 முதல் தங்க சேமிப்பு! GST இல்லாமல் டிஜிட்டல் தங்க முதலீடு செய்யும் புதிய வாய்ப்பு
Published
4 நாட்கள் agoon
By
Poovizhi
இந்தியர்களின் பாரம்பரிய முதலீட்டு தேர்வுகளில் தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், காலத்தின் மாற்றத்தால் தங்க முதலீடும் டிஜிட்டல் வடிவத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில், தற்போது அதிக கவனம் பெறும் திட்டமாக Electronic Gold Receipt (EGR) உள்ளது.
EGR என்பது தங்கத்தை டிஜிட்டல் வடிவில் சேமித்து, வாங்கி, விற்பனை செய்ய உதவும் ஒரு முறை. பங்குச் சந்தையில் டிமேட் கணக்குகள் மூலம் பங்குகளை வைத்திருப்பது போல, தங்கத்தையும் டிஜிட்டல் வடிவில் வைத்திருக்க முடியும். இது இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI) மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட பாதுகாப்பான முதலீட்டு முறையாகும்.
EGR-ன் சிறப்பம்சங்கள்
தற்போது EGR-ல் 100 மில்லிகிராம் முதல் 1 கிலோ வரை தங்கத்தை வாங்கும் வசதி உள்ளது. எதிர்காலத்தில் 1 மில்லிகிராம் அளவிலும் முதலீடு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்போதைய தங்க விலைப்படி வெறும் ரூ.15 முதலே தங்க சேமிப்பை தொடங்க முடியும்.
மேலும், EGR முதலீட்டில் முக்கியமான நன்மை என்னவெனில், தங்க நகைகள் வாங்கும்போது செலுத்த வேண்டிய GST வரி இதில் கிடையாது. வாங்குவதும் விற்பதும் எளிதாக நடைபெறும்.
6% வரை வருமான வாய்ப்பு
மியூச்சுவல் பண்டுகளில் உள்ள தங்க முதலீடுகளை EGR ஆக மாற்றிக்கொள்ளும் வசதியும் உள்ளது. அதேபோல், பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்க நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகளை EGR ஆக மாற்றினால், ஆண்டுக்கு சுமார் 6 சதவீதம் வரை வருமானம் பெறும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நகைக்கு பதிலாக டிஜிட்டல் தங்கம்
இன்றைய இளம் தலைமுறையினர் தங்கத்தை ஆபரணமாக அல்லாமல் முதலீடாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்காக இப்போதே நகை வாங்கி சேமிப்பதற்கு பதிலாக, EGR போன்ற டிஜிட்டல் முதலீடுகளை தேர்வு செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது.
எதிர்காலத்தில் நகைக்கடைகளில் நேரடியாக பணம் செலுத்துவதற்கு பதிலாக, EGR மதிப்பின் அடிப்படையில் நகைகளை பெற்றுக்கொள்ளும் வசதியும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடன் பெறுவதும் எளிது
திடீர் நிதி தேவை ஏற்பட்டால், தங்க நகைகளை அடகு வைப்பதற்கு பதிலாக EGR-ஐ அடமானமாக வைத்து சில நொடிகளில் கடன் பெறும் வசதியும் எதிர்காலத்தில் பரவலாக பயன்பாட்டுக்கு வரக்கூடும்.
இந்திய தங்க சந்தையில் புதிய மாற்றம்
இந்தியாவில் வீடுகள் மற்றும் கோவில்களில் சேர்த்து சுமார் 50,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும், ஆண்டுதோறும் சுமார் 700 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. EGR போன்ற திட்டங்கள் உள்நாட்டு தங்கத்தை சந்தைக்குள் கொண்டு வர உதவினால், இறக்குமதி தேவையும் குறைய வாய்ப்புள்ளது.
நிபுணர்களின் கருத்துப்படி, எதிர்காலத்தில் இந்தியாவின் EGR சந்தை தங்க விலையை நிர்ணயிக்கும் முக்கிய தளமாக உருவெடுக்கக்கூடும்.
முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை
தினசரி விலை ஏற்ற இறக்கங்களைப் பார்த்து பதற்றப்படாமல், நீண்ட கால நோக்கில் தங்கம், வெள்ளி மற்றும் தரமான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். முதலீட்டாளரின் மனப்பான்மையுடன் செயல்படுவது நீண்டகால செல்வ உருவாக்கத்திற்கு உதவும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

















