தமிழ்நாடு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு: ரத்து, ஒத்திவைப்பு இல்லையா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை செய்ய நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் சிறப்பு கூட்டத்தைக் கூட்டினார். இந்த கூட்டத்தின் முடிவில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு குறித்து தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு அல்லது ரத்து செய்வது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. செய்முறை தேர்வுகள் இன்று பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் விதித்துள்ளது.
இன்று முதல் மொத்தம் 28 வகையான பாடங்களுக்கு செய்முறை தேர்வு நடைபெறும் என்பதால் பாடவாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. செய்முறை தேர்வில் ஈடுபடும் மாணவர்கள் கிருமிநாசினி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு மாணவர்களுக்கு தனி தனி இட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும், ஆய்வக பொருள்கள் அனைத்தும் உடனுக்குடன் சுத்தம் செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டுமென்றும் பிப்பெட் உள்ளிட்ட பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குவதை அடுத்து அனைத்து செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் செய்முறை தேர்வு மதிப்பெண்களை ஏப்ரல் 24-ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







