தமிழ்நாடு
எடப்பாடியின் தற்காலிக மகிழ்ச்சி நீடிக்காது: வைத்திலிங்கம் உறுதி!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவது உறுதியாகியுள்ளது. இதனை ஈபிஎஸ் தரப்பு கொண்டாடிவரும் நிலையில் இந்த மகிழ்ச்சி நீடிக்காது என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

#image_title
ஓபிஎஸ் தரப்பு அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது, அதில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம். இது இறுதியான தீர்ப்பு இல்லை. எம்ஜிஆர் இயற்றிய சட்ட விதிகள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்காலிகமாக மகிழ்ச்சியில் இருக்கிறது, அந்த மகிழ்ச்சி நீடிக்காது என்று கூறினார்.

















