தமிழ்நாடு
தொப்பி… கூலிங் கிளாஸ்… எம்ஜிஆராக மாறிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வழக்கின் தீர்ப்பில் ஓபிஎஸ் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்தாலும் அவர்கள் மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பை விட வேகமாக மின்னல் போன்று எடப்பாடி தரப்பு இன்று செயல்பட்டு உடனடியாக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
இதனை தமிழகம் முழுவதும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் எம்ஜிஆர் போன்று தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் அணிவித்து பொதுச்செயலாளர் எடப்பாடியார் என கோஷம் எழுப்பினர். இதனையடுத்து எம்ஜிஆர் போன்று எடப்பாடி பழனிசாமி தொப்பி, கூலிங் கிளாஸ் அணிந்து காட்சி அளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.