தமிழ்நாடு
மின்னல் வேகத்தில் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி: மேல்முறையீட்டுக்கு பறந்த ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்கு சென்றுள்ளது.

#image_title
இந்த வழக்கின் தீர்ப்பில் ஓபிஎஸ் தரப்பின் மனுவை தள்ளுபடி செய்தாலும் அவர்கள் மேல்முறையீடு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பை விட வேகமாக மின்னல் போன்று எடப்பாடி தரப்பு இன்று செயல்பட்டு உடனடியாக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அறிவித்து அவரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர்.
ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில், மீண்டும் இடைக்காலத் தடை வாங்க வாய்ப்பு இருந்தது இதனால் அந்த வாய்ப்பை ஓபிஎஸ் தரப்புக்கு வழங்காமல் எடப்பாடி பழனிசாமி இன்று உடனடியாக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டது கவனிக்கத்தக்கது.