செய்திகள்
ரேஷன் கார்டு வைத்துள்ள முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் – சென்னை பகுதிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!

ரேஷன் கார்டு வைத்துள்ள முதியோர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோக தேதிகளை மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். பல மாவட்டங்களில் டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை மண்டலத்திற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் சென்னையில் உள்ள ஆனானகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பல பகுதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 15 மண்டலங்களில் செயல்படும் 990 நியாயவிலைக் கடைகள் மூலம் வீடு தேடி பொருட்கள் விநியோகிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் பயனாளிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். புதியதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அல்லது பொதுவிநியோக திட்ட குறைத்தீர்வு முகாம்களில் மனு அளிக்கலாம். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி உள்ளவர்கள் தாயுமானவர் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.


