இந்தியா
இந்த ரயில் பாதைக்காக இந்தியன் ரயில்வே ரூ.1 கோடி பணம் கொடுக்கின்றதா?

இந்தியாவில் உள்ள பல ரயில் பாதைகள் பிரிட்டிஷார் காலத்தில் போடப்பட்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட ரயில் பாதைக்காக மட்டும் இந்தியா ஒரு கோடி ரூபாய் பிரிட்டன் அரசாங்கத்திற்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யவத்மாலுக்கும் மூர்த்திஜாபூருக்கும் இடையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது கட்டப்பட்ட சகுந்தலா ரயில்வே என்ற 190 கிமீ நீளமுள்ள குறுகிய ரயில் பாதையில் ரயில் இயக்குவதற்கு ஒஉரிட்டன் அரசுக்கு இந்தியா ரூபாய் ஒரு கோடி செலுத்துகிறது என்று ஒரு சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
ஆனால் சகுந்தலா ரயில் பாதைக்காக பிரிட்டன் அரசுக்கு இந்தியா பணம் செலுத்துவதாக கூறப்படும் அறிக்கையை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. தற்போது இந்த ரயில் பாதையில் எந்தவித ரயில் சேவையும் இயங்கவில்லை என்றும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே தலைமை பிஆர்ஓ சிவாஜி சுதார் அவர்கள் கூறுகையில் ’இந்திய ரயில்வே நிலத்தில் குறுகிய ரயில் பாதை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இருப்பினும் ரயில்வே நிறுவனம் பிரிட்டன் அரசுக்கு எந்தவிதமான பணமும் செலுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் முர்தசாபூர்- அச்சல்பூர் மற்றும் முர்தசாபூர்-யவத்மால் இடையிலான சகுந்தலா ரயில் பாதையில் தற்போது எந்த விதமான ரயில் சேவையும் இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டிஷார் காலத்தில் மத்திய இந்தியா முழுவதும் இயங்கிய கிரேட் இந்தியன் பெனிசுலர் இரயில்வே இந்தப் பாதையில் ரயில்களை இயக்கியது. 1952ல் ரயில்வே தேசியமயமாக்கப்பட்டபோது இந்தப் பாதை புறக்கணிக்கப்பட்டது என்றும் தெரிகிறது.
1910 இல், கில்லிக்-நிக்சன் என்ற ஒரு தனியார் பிரிட்டிஷ் நிறுவனம் சகுந்தலா ரயில்வேயை நிறுவியது. சகுந்தலா ரயில் பாதை 1923 முதல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டது. இந்த ரயில் பாதையின் நோக்கம் பருத்தியை யவத்மாலில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்று அதன் பின்னர் அது இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டருக்கு அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.