தமிழ்நாடு
திமுக சொல்வது மிகப்பெரிய பொய்: எடப்பாடி பழனிசாமி

திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தேர்தலின் போது திமுக 525 வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் 200 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. திமுக சொல்வது மிகப்பெரிய பொய்.
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக ஆட்சி செய்து வரும் மு.க.ஸ்டாலின், மக்களுக்காக எந்த நன்மையையும் செய்யவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
மேலும் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களையும், முடிந்த திட்டங்களையும் தான் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார் எனக் கூறினார்.

அதேநேரம் சேலத்தில் காணொலி காட்சி மூலம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன்” எனக் கூறினார்.


















