செய்திகள்
மோந்தா புயல் கடந்தது – தமிழ்நாட்டில் மழை நிலைமை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் புதிய அப்டேட்!

வடக்கு கடலில் உருவாகி கடந்த சில நாட்களாக தாக்கம் செலுத்திய மோந்தா புயல் (Cyclone Monda) நேற்று இரவு (அக்டோபர் 28) ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா – மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து, ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன.
தமிழ்நாட்டில் புயலின் நேரடி தாக்கம் குறைவாக இருந்தாலும், கடந்த சில நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடையறாத மழை பெய்தது. இதனால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரிய ஒளி மீண்டும் பூமியைத் தொட்ந்தது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில் வானிலை அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“மோந்தா புயல் ஆந்திரா வழியாக கரையை கடந்துவிட்டது. இது இப்போது படிப்படியாக வலுவிழக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை குறையும். மாணவர்கள் இனி மழை விடுமுறை எதிர்பார்க்க வேண்டாம்; வீடுகளில் துணிகளை காயப்போடலாம்!”
மேலும், இன்று (அக்டோபர் 29) வால்பாறை, நீலகிரி மேற்குப் பகுதிகள் (பந்தலூர் – அவலாஞ்சி), கன்னியாகுமரி மலைத்தொடர்கள் அருகில், தேனி மற்றும் திண்டுக்கல் மலைப் பகுதிகள், அதோடு புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.




