சினிமா செய்திகள்
காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஆர்யா: 2 மணி நேரம் தீவிர விசாரணை!

நடிகர் ஆர்யா மீது இளம்பெண் ஒருவர் பண மோசடி குறித்த குற்றச்சாட்டு கூறிய நிலையில் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முன் நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ் பெண் வித்ஜா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா கூறி அவரிடம் இருந்து 71 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் இதனை அடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை அடுத்து வித்ஜாவின் வழக்கறிஞர் சிபிசிஐடி விசாரிக்க மனு அளித்தார். இந்த மனு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டதை அடுத்து தற்போது மத்திய குற்றப் பிரிவினர் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 18ஆம் தேதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் போலீசார் ஆர்யாவை விசாரணை செய்ய முடிவு செய்தனர். இதனை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பதும் நேற்று அவர் போலீசார் முன்பு ஆஜர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடிகர் ஆர்யாவிடம் இளம்பெண் வித்ஜாவின் குற்றச்சாட்டு குறித்து இரண்டு மணி நேரம் விசாரணை செய்ததாகவும் அதன் பின்னர் அவர் காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஜெர்மனி பெண் வித்ஜா, ஆர்யாவின் உதவியாளருக்கு 71 லட்சம் ரூபாய் அனுப்பியதற்கான ஆதாரங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியபோது ஆர்யாவிடம் விசாரணையை செய்யப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் அவரிடம் விசாரணை நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஜெர்மனி பெண் வித்ஜாவிடம் ரூபாய் 71 லட்சம் பெற்றதைஆர்யா இதுவரை பகிரங்கமாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


















