தமிழ்நாடு
சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மருத்துவ செலவுக்காக சில தினங்களுக்கு முன் முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு தொலைபேசி மூலமே ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி உரிய சிகிச்சையை உடனடியாக ஏற்பாடு செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த சிறுமி ஜனனி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பதும் விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜனனி என்ற சிறுமியை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ’பயப்படவேண்டாம் என்றும் தைரியமாக இருக்க வேண்டும்’ என்றும் சிறுமிக்கு நம்பிக்கை அளித்த முதல்வர் மாற்று சிறுநீரகம் கிடைத்ததும் சிறுமிக்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறுநீரகங்கள் செயலிழந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்த சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வி ஜனனியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு அளிக்கும் என உறுதியளித்தார். pic.twitter.com/3W7SSiKIOS
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 27, 2021
















