தமிழ்நாடு
11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து வரும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி விட்டன என்பதும் இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

















