ஆரோக்கியம்
சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? உண்மையை வெளியிட்ட டாக்டர்!

சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும்? உண்மையா தவறா? – டாக்டர் விளக்கம்
சிக்கன் என்பது உலகளவில் அதிகம் விரும்பப்படும் இறைச்சி வகையாகும். விலை குறைவாகவும், புரோட்டீனில் செறிந்ததாகவும் இருப்பதால், உடற்பயிற்சி செய்யும் நபர்களிடம் கூட இது பெரிதும் பிரபலமாக உள்ளது.
இந்த நிலையில், ஒரு புதிய ஆய்வில் வாரத்திற்கு 300 கிராம் சிக்கனை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கலாம் என கூறப்பட்டது. இதனால் சிக்கன் சாப்பிடுவதைத் தவிர்க்கலாமா என பலர் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த தகவலுக்கு விளக்கம் அளித்துள்ள டாக்டர் அருண்குமார், இந்த ஆய்வு 19 வருடங்களுக்கு முன்னர் மக்களின் உணவு பழக்கங்களை பதிவுசெய்து, தொடர்ந்து அவர்களை 19 ஆண்டுகள் கண்காணித்து உருவாக்கப்பட்டதாக கூறுகிறார். ஆய்வின் முடிவுகளில், சிக்கனை அதிகமாக சாப்பிடுபவர்களிடம் இறப்பு விகிதம் சிறிது அதிகமாக இருந்தது.
ஆனால் இதற்கு முன் உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, மட்டன், மாட்டிறைச்சி, பன்றிக்கறி போன்றவற்றை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம், ஆனால் சிக்கன் மற்றும் மீன் சாப்பிடுபவர்களுக்கு அந்த அபாயம் குறைவாகவே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதனால், ஒரு ஆய்வில் சிக்கன் பாதுகாப்பானது எனவும், மற்றொரு ஆய்வில் ஆபத்தானது எனவும் கூறப்படுவதால், மக்கள் குழப்பமடைவது இயல்பான விஷயம்.
டாக்டர் அருண்குமாரின் அறிவுரை என்ன?
புற்றுநோய் என்பது ஒரே காரணத்தால் ஏற்படுவது அல்ல. வாழ்க்கை முறை, மரபணுக்கள், உணவு தயாரிக்கும் முறை, புகைபிடித்தல், மதுபழக்கம் போன்றவை அனைத்தும் புற்றுநோயின் அபாயத்தை தீர்மானிக்கின்றன.
எனவே, சிக்கனை முறையாக சமைத்து, சீராக உட்கொண்டு, உடற்பயிற்சி செய்து, நல்ல தூக்கம் பெறும் பழக்கத்துடன் வாழ்ந்தால், எந்தவிதமான ஆபாயமும் இல்லை.
சிக்கன் சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்பது தவறான தகவலாகும். ஆரோக்கியமான முறையில் சமைத்து சிக்கனை நம்பிக்கையுடன் சாப்பிடலாம்.














