தமிழ்நாடு
ஈபிஎஸ் உடன் டூ விட்ட அண்ணாமலை ஓபிஎஸுடன் சந்திப்பு!

கடந்த சில தினங்களாக பாஜக – அதிமுக இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மீது அண்ணாமலை வருத்தத்திலும் கோபத்திலும் உள்ளார். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் எதிர்தரப்பான ஓபிஎஸை சந்தித்துள்ளார் அண்ணாமலை.

#image_title
பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி கூட்டணி கட்சியான அதிமுகவில் இணையும் போது பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்தார். அவரை அதிமுக அரவணைத்துக்கொண்டது பாஜகவை எரிச்சல் அடைய வைத்தது.
இந்த அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்குள் பாஜக ஐடி விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவில் இருந்து விலகி சொல்லி வைத்தார்போல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும், நிச்சயம் எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து தேனி பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
ஓபிஎஸின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி காலமானதையடுத்து, ஓபிஎஸை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றார் அண்ணாமலை. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன்.
இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை அண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற சென்றதாக அண்ணாமலை கூறினாலும், எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கு உள்ள நிலையில் ஓபிஎஸ் உடன் நடந்த இந்த சந்திப்பு அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.