தமிழ்நாடு
இதற்கெல்லாம் ரூ.13 கோடி செலவு செய்ய முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷிடம் முதல்வர் திட்டவட்டம்

தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக தரும் புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புகைப்படம் இருப்பதாகவும் அவற்றை மாற்றி தர அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டபோது அந்த புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என்றும், அப்படியே கொடுக்கலாம் என பெருந்தன்மையுடன் முதலாம் முதலமைச்சர் கூறியதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று சட்டசபையில் இது குறித்து அவர் பேசியபோது அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கும் விலையில்லா புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படம் இருக்கிறது என்றும் அதை மாற்றவேண்டும் என்று நான் கூறினேன்.
அதை மாற்ற ரூபாய் 13 கோடி செலவாகும் என்றும் முதலமைச்சரிடம் தான் கூறியபோது, முன்னாள் முதல்வரின் படத்தை மாற்றுவதற்காக 13 கோடி செலவு செய்ய முடியாது என்றும் அந்த பணத்தை மாணவர்கள் நலனுக்கு செலவு செய்யலாம் என்று முதலமைச்சர் பெருந்தன்மையுடன் கூறினார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்காக தான் நாங்கள் செலவு செய்து வருகிறோம் என்றும் அதிமுக ஆட்சியில் தொடங்கிய சத்துணவு திட்டம் இன்னும் அதே பெயரில் தான் இயங்கி வருகிறது என்றும் மாணவர்களின் கல்வியில் எப்போதும் நாங்கள் விளையாட மாட்டோம் என்றும் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். எனவே திமுக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது என்று யாரும் கூற வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரின் படங்களை இருக்கட்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருந்தன்மையுடன் தெரிவித்தது குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.








