தமிழ்நாடு
திருவள்ளூர் அமமுக வேட்பாளருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காரணத்தினால்தான் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தலுக்குள் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாகி விடும் என்பதால் தேர்தலுக்கு பின் ஊரடங்கு பிறப்பிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில வேட்பாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்தோம். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் இருவருக்கும், தேமுதிக வேட்பாளர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் குரு என்பவருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் அவர் டிஜிட்டல் மூலம் பிரச்சாரத்தை தொடர முடிவு செய்துள்ளார்.




















