இந்தியா
அஜய் பங்கா, சத்யா நாதெள்ளா, ஹர்ஷா போக்லே: இவர்கள் ஒரே பள்ளியில் படித்த மாணவர்களா?

உலக வங்கியின் அடுத்த தலைவராக அஜய் பங்கா அவர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பதும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இந்த பரிந்துரையை செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பதவியில் இருக்கும் சத்ய நாதெல்லா மற்றும் ஹர்ஷா போஹ்லே ஆகியோர்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய ஒற்றுமை இருப்பதாக தற்போது தெரிய வந்துள்ளது, ஆம் இந்த உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்ற இந்த மூவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்ஷா போஹ்லெ அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை, இவர் கிரிக்கெட் வர்ணனைகளை மிகச் சிறப்பாக செய்பவர் என்பது அனைவரும் அறிந்ததே.
உலகின் பல முன்னணி நிறுவனங்களின் சிஇஓ பதவிகளில் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை உட்பட பலர் உலகை ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. அமெரிக்க துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அதுமட்டுமின்றி அடுத்த அமெரிக்க அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் என்ற தொழில் அதிபர் தேர்வு செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி ஆன அஜய் பங்கா உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார் என்பதும் அவருடைய திறமையை அமெரிக்க ஜனாதிபதியே பாராட்டி உலக வங்கி தலைவர் என்ற பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அஜய் பங்கா,மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்ய நாதெல்லா மற்றும் அடோப் சிஇஓ சாந்தனு நாராயணன், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போஹ்லே ஆகியோர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

hps school
ஹைதராபாத் பப்ளிக் ஸ்கூல் என்று அழைக்கப்படும் HPS என்ற பள்ளியில் இவர்கள் மட்டுமின்றி Fairfax Financial CEO பிரேம் வட்சா, மூத்த தூதர் சையத் அக்பருதீன், பீர் பேரன் கரன் பிலிமோரியா, முன்னாள் விப்ரோ CEO TK குரியன் மற்றும் நடிகர் ராம் சரண் ஆகியவர்களும் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி சிந்திக்கவும் ஆக்கப்பூர்வமாக இருக்கவும் கற்றுக் கொடுக்கிறது என்றும் வெற்றிகரமான இளைய தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்பதை இந்த பள்ளியின் நோக்கம் என்றும் இந்த பள்ளியைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் பணிபுரியும் நரசிம்மரெட்டி என்பவர் கூறிய போது HPS மாணவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள் என்றும் அவர்கள் முதலாம் வகுப்பிலிருந்து மேடை நடவடிக்கைகளில் பங்கேற்கவும் தைரியமாகவும் நம்பிக்கையுடன் இருக்கவும் கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றும் விளையாட்டுக்கள் மற்றும் விளையாட்டு சாராத செயல்பாடுகளில் அவர்களை ஊக்குவிக்க பழக்க வைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். பள்ளியில் கல்வி கற்பது என்பது மட்டுமின்றி பாட புத்தகத்தையும் தாண்டி நிறைய இருக்கிறது என்றும் அவற்றை நாங்கள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
ஹைதராபாத் பப்ளிக் பள்ளியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஸ்கந்த் பாலி இதுகுறித்து கூறியபோது, ‘எங்களைப் பொறுத்தவரை, ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி மிகவும் முக்கியமானது, நாங்கள் கல்வி, விளையாட்டு, இணை பாடத்திட்ட செயல்பாடுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். பள்ளியில் விவசாயம் மற்றும் தொழில்முனைவோரை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஒவ்வொரு துறையிலும் ஒரு குழந்தை முழுமையான வளர்ச்சியைப் பெறுவது மிகவும் முக்கியம்’ என்று தெரிவித்தார்.,
ஹைதராபாத் பப்ளிக் பள்ளி 1923 இல் ஹைதராபாத் ஏழாவது நிஜாம் ஜாகிர்தார் கல்லூரியாக நிறுவப்பட்டது. முதலில் உயர்குடி மற்றும் உயரடுக்கு கல்வி நிறுவனமாக கருதப்பட்டது. இது 1950 இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின்னர் ஹைதராபாத் பப்ளிக் பள்ளி என்று மறுபெயரிடப்பட்டது.
இந்த பள்ளியில் படித்தவர்கள் பலர் CEO க்கள், வணிகத் தலைவர்கள், தூதர்கள், சிவில் சர்வீசஸ் அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என நாட்டின் முன்னேற்றத்தில் பங்களித்து வருகின்றனர். சத்யா நாதெல்லா மற்றும் அஜய் பங்கா தவிர, மக்களவை எம்பி அசாதுதீன் ஓவைசி, நடிகர்கள் ராம் சரண், அக்கினேனி நாகார்ஜுனா, விவேக் ஓபராய் மற்றும் ராணா டக்குபதி, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, உலக அழகி டயானா ஹைடன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் இந்த பள்ளியின் முந்தைய மாணவர்களாகும்.