இந்தியா
பிளிப்கார்ட் எடுத்த அதிரடி முடிவு.. 4500 இந்திய ஊழியர்களுக்கு பாதிப்பு..!

பிளிப்கார்ட் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு காரணமாக இந்தியாவில் பணிபுரியும் 4500 ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். பொருளாதார மந்த நிலை, பணவீக்கம், வட்டி விகித உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால் பெரிய நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளதை அடுத்து வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்கத்தை செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுக்காவிட்டாலும் சம்பள குறைப்பு மற்றும் சம்பள உயர்வை நிறுத்துதல் ஆகிய நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது 30 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஜனவரி முதல் டிசம்பர் காலத்திற்கான ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு அளிக்கப் போவதில்லை என மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 4500 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஏற்ற இறக்க பொருளாதார நிலை காரணமாக பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்ய வைப்பதை நிறுவன மேலாண்மை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் வருவாய் குறைந்து வருவதால் இந்த ஆண்டு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அளிக்கப் போவதில்லை என்றும் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு 30 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது ஊழியர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தியாகும்.