தமிழ்நாடு
அதிமுகவின் கடைசி தேர்தல் இதுதான்: எச்சரிக்கும் செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதத்தில் இடைத்தேர்தல் வர உள்ளது. இது தான் அதிமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும் என சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்துள்ளார்.
அதிமுகவில் முன்னாள் அமைச்சரும், அமமுகவில் மாநில அமைப்பு செயலாளருமாகவும் இருந்த கரூர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை கரூரில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, வருகிற மே மாத இறுதியில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவின் இறுதித்தேர்தலாய் இருக்கும். அதை உறுதி செய்து காமராஜரும், அண்ணாவும், டாக்டர் கலைஞரும் அமர்ந்த அரியணையில் திமுக தலைவர் அமர்வார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்று இந்திய தேசத்தின் பிரதமரை தேர்ந்தெடுக்கக் கூடியவர் திமுக தலைவர் என கூறினார்.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, கூவத்தூர் பழனிச்சாமி எனவும், அவர் ஸ்டாலின் முதல்வர் ஆன பின்னர் சிறைக்கு செல்வார் எனவும் விமர்சித்தார் செந்தில் பாலாஜி.





















